Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்த பரிதாபம்

ஏப்ரல் 18, 2020 02:03

உதகை: உதகை பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் தலை சிக்கி பெண் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் கேரட், கிழங்கு, முட்டை கோஸ் ஆகிய காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன. இங்கு கேரட் கழுவி சென்னை, பெங்களூரு உட்பட பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

கேரட் கழுவும் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,  இங்குள்ள கேரட் கழுவும் இயந்திரத்தில், நந்தினி (18) என்ற பெண் கேரட் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நந்தினியின் தலை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. நீளமான கூந்தல் மற்றும் அவர் அணிந்திருந்த உடை இயந்திரத்தில் நன்றாக சிக்கக் கொண்டதால், அவர் மீள முடியாமல் தவித்தார். பிற பணியாளர்கள் சுதாரிக்கும் முன்னர், நந்தினியின் தலை துண்டித்து, தலை மற்றும் உடல் தனித்தனியாக இரண்டு துண்டாகி, நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விபத்து குறித்து கேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இறந்த நந்தினியின் தாய் சுமித்திரா, தந்தை சுப்ரமணி. இவர்களுக்கு மணிகண்டன் (22), அருண் (15) என்ற இரண்டு மகன்கள், நந்தினி என்ற 18 மகளுடன் சேலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 20 வருடங்களாக எதுமை கண்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.

கேரட் கழுவும் தொழிலை இவர்கள் செய்து வந்த நிலையில் இவர்களது மகள் நந்தினி, கேரட் கழுவும் இயந்திரத்தில் எதிர்பாராவிதமாக சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் உதகை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்