Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் தவித்த ரஷ்ய சிவபக்தர்: மாநகராட்சி உதவி

ஏப்ரல் 19, 2020 06:18

சென்னை: இந்தியாவில் உள்ள சிவாலயங்களை தரிசிக்க, ரஷ்யாவில் இருந்து வந்த சிவபக்தர் ஒருவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமலும், மொழி தெரியாமல், சென்னையில் உணவில்லாமல் சுற்றி கொண்டிருந்தார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்தவர் ருஸ்லான். தீவிர சிவபக்தரான அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்தார். மஹா சிவராத்திரி அன்று, வாரணாசியில் தரிசனம் முடித்துவிட்டு, தமிழகம் வந்தார். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், தஞ்சாவூர் பெரியகோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வழிபட்ட பின்னர், சென்னை வந்தார். தொடர்ந்து கடந்த மார்ச் 28 ம் தேதி கோல்கட்டா சென்று பின்னர் அங்கிருந்து ரஷ்யா கிளம்ப ருஸ்லான் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா காரணமாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அவர் சென்னயிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

கையில் வைத்திருந்த பணமும் செல்வழிந்துவிட, கிரெடிட், டெபிட் கார்டுகள் வைத்திருந்த பர்சும் காணாமல் போனது. இதனால், ரஷ்யாவில் செல்வந்தராக இருந்தும், இங்கு உணவில்லாமலும், தங்க இடமும் இல்லாமலும் சென்னையில் மூன்று வாரங்களாக சுற்றியுள்ளார். இதனை கேட்ட ஒருவர், உதவிக்கு சென்னை மாநகராட்சியை அணுகும்படி ஆலோசனை கூறியுள்ளார்.

இதனால், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், பாஸ் வழங்கும் கவுன்டடரில் பணியாற்றிய ஊழியர்களிடம் உதவி கோரினார் ருஸ்லான். கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டினரான ருஸ்லானை பார்த்து பயந்து போன ஊழியர்கள் ஒரு ஓரத்தில் அமரும்படி அறிவுறுத்தினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை சரிபார்த்து, ருஸ்லானுக்கு உணவு வழங்கினர். கொரோனா பரிசோதனை முடிந்த பின்னர், மாநகராட்சி தங்குமிடத்திற்கு ருஸ்லானை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்