Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வழக்கு விசாரணைக்கு கொரோனா பாதிப்புடன் வந்தவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சி

ஏப்ரல் 19, 2020 06:58

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு விசாரணையின் போது, கொரோனா பாதித்தவரும் பங்கேற்றார். இதனால், உயர்நீதிமன்றத்தில் தூய்மைப்பணிகள் நடப்பதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச் 24 முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவற்றில் வழக்கமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்தப்படுகின்றன. அது போன்ற அவசர வழக்குகளை டிவிஷன் பெஞ்ச் அல்லது தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்டாலும் அது வீடியோ கான்பரன்சிங் முறையில் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது. முக்கியமான வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

அது போன்று தான், கொரோனா வைரஸ் குறித்து, குறிப்பிட்ட மதத்தினரை தொடர்புப்படுத்தி மீடியாக்கள் செய்தி வெளியிடுவது தொடர்பாகவும், பொது மக்களுக்கு, கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்க அரசு தடை விதித்ததற்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்குகள், கடந்த 16 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, அட்வகேட் ஜெனரல், மூத்த வழக்கறிஞர்கள், மனு தொடர்ந்தவர் சார்பில் வழக்கறிஞர்கள், டிவி மற்றும் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்டோர் நீதிமன்ற அறையில் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அரசு வழக்கறிஞரின் உதவியாளர் ஒருவருக்கு, ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று(ஏப்.,18) அமைச்சர் விஜயபாஸ்கர், பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். கொரோனா பாதித்தவர், கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் நடந்த விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி நடந்தது.

ஏராளமானோர் கூடியிருந்த அறையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, உதவியாளரும் உடன் இருந்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் நீதிமன்றம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிஐஎஸ்எப் வீரர்களின் பரிசோதனைக்கு பிறகே, அந்த ஊழியர் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார். இதனால், அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், வழக்கு விசாரணையின் போது, இருந்த அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்