Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: அரசு அறிவிப்பு

ஏப்ரல் 19, 2020 07:01

சென்னை: தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 20ம் தேதிக்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின், எப்படி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தலாம் என, ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில், வருவாய், தொழிலாளர், டி.ஜி.பி., சுகாதாரம், தொழில், வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து துறை செயலர்கள், சுகாதாரத் துறை இயக்குனர், நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த, முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன், ஓய்வுபெற்ற டாக்டர் குகநாதன், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதி உட்பட, 17 பேர் இடம் பெற்றிருந்தனர்.
புதிதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய தொற்றுநோய் மைய இயக்குனர், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் கூட்டமைப்பு பிரதிநிதி, சிறு, குறு தொழில் கூட்டமைப்பு பிரதிநிதி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இக்குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 3:30 முதல், 5:20 வரை, சென்னை, தலைமை செயலகத்தில், குழுத் தலைவரும், நிதித்துறை செயலருமான கிருஷ்ணன், தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நாளை மறுதினம் முதல், எந்தெந்த தொழில்கள் செயல்பட அனுமதிஅளிப்பது; தொழிலாளர்கள் பணிக்கு செல்ல, எவ்வளவு வாகனங்களை இயக்க அனுமதிப்பது என்பது குறித்து ஆலோசித்தனர். இதனால், நாளை முதல் சில தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் புதிய உத்தரவு வரும் வரை , தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு முதல் கட்ட ஆலோசனையை, முதல்வரிடம் நாளை தெரிவிக்க உள்ளது. குழுவின் ஆலோசனையை ஆய்வு செய்து முதல்வர் முடிவு எடுப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்