Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவு, தண்ணீர் கிடைக்காததால் தெருவில் செல்வோரை விரட்டி, விரட்டி கடிக்கும் நாய்கள்

ஏப்ரல் 19, 2020 09:51

திருத்துறைப்பூண்டி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருந்து கடைகள் மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர ஓட்டல்கள் டிபன் சென்டர்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.

சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும். வெளியில் தேவையின்றி நடமாடக்கூடாது என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில் உள்ள தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் தங்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காததால் சாப்பாடு மற்றும் தண்ணீரை தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றன. பசியால் அலையும் நாய்கள் தங்களுக்கு யாராவது சாப்பாடு தண்ணீர் தரமாட்டார்களா என்று எதிர்பார்த்தபடி உள்ளன.

அந்த நேரத்தில் தெருவில் யாரேனும் நடந்து சென்றாலோ அல்லது சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றாலோ உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களை விரட்டிச் செல்கின்றன. தெருவில் செல்வோர் தங்களுக்கு உணவு ஏதேனும் தராமல் சென்றாலோ அவர்களை ஒரு சில நாய்கள் விரட்டி விரட்டி கடித்து வருகின்றன. இவ்வாறு தெரு நாய் ஒன்று கடித்ததில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டியை சேர்ந்தவரும் கோட்டூர் மின்சார வாரியத்தில் வணிக உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தவருமான முருகபாண்டியன் (35) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல அதே ஊரை சேர்ந்த விவசாய சங்க தலைவர் மாணிக்கம் மகன் முரளி (35), மின்சார வாரியத்தில் பணிபுரியும் சுப்பிரமணியன் மனைவி மலர்விழி, மணிவண்ணன் மகள் அபி(8), மடப்புரத்தை சேர்ந்த தங்கராசு மகன் சுபாஷ் சந்திரபோஸ் (30) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்துள்ளன. இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாய் கடிபட்டவர்கள் மருத்துவமனைக்கு கூட சிகிச்சைக்காக தொடர்ந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே திருத்துறைப்பூண்டி பகுதியில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும். பராமரிப்பு இல்லாத தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கடியால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின்
மாவட்ட செயலாளர் செல்வன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்