Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறார்கள்: துறையூர் தற்காலிக மார்க்கெட்டில் சுகாதாரகேடு; தொற்று நோய் பரவும் அபாயம்

ஏப்ரல் 19, 2020 10:39

துறையூர்: துறையூர் தற்காலிக மார்க்கெட்டில் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டு பரந்த வெளிகளில் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் துறையூரில் ஆலமர சாலையில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட், துறையூர்- திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள் வாங்குவதற்கு துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தற்காலிக மார்க்கெட் முன்பு குப்பைகள் அதிகளவு தேங்கி கிடக்கிறது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் அசுத்தம் தேங்கி நிற்கிறது. அதில் கிருமி நாசினியும் தெளிக்கப்படுவது இல்லை.

மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு கைகளை கழுவ திரவம் மற்றும் சோப்புகளும் போதுமான அளவில் இல்லை. இந்த கழிவுநீர் கால்வாய் அருகில் தான் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதுமட்டுமின்றி மார்க்கெட்டுக்கு வருபவர்கள் கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆகவே தற்காலிக மார்க்கெட் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரவும், கிருமி நாசினி தெளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்