Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை முதல் டோல்கேட் வசூல் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 19, 2020 11:28

சென்னை: திங்கள் முதல் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரிக்க உள்ள நிலையில் டோல்கேட் வசூல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் சுங்கச்சாவடியில் பண வசூலை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு, வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள 20ம் தேதி முதல் மீண்டும் அதை தொடங்குகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மக்கள் மீது மேலும் சுமையை உயர்த்தக் கூடாது எனக் கருதி மத்திய போக்குவரத்து அமைச்சகம் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்க வேண்டாம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மிக முக்கிய காரணங்களோடு பயணிப்பவர்கள் மட்டுமே சாலைகளில் பயணித்தனர். இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.
இதனால் சுங்கச்சாவடி கட்டண விலக்கு என்பது பெரிதாக மக்களின் பொருளாதாரத்தில் உதவவில்லை. இப்போதைய நேரத்தில் ஊரடங்கு மீண்டும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் வரும் 20ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், பல்வேறு தொழிற்சாலைகள் சில கட்டுப்பாடுகளுடனும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மத்திய அரசு, சுங்கச்சாவடிகள் மீண்டும் நாளை 20ம் தேதி முதல் இயங்கும் எனக் குறிப்பிட்டு அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் சுங்கக்கட்டணத்தை வசூலிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள சூழலில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்