Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் 10 ரூபாய்க்கு 4 சப்பாத்தி; வீட்டிற்கே வரும் உணவு: முதல்வர் துவக்கிவைப்பு

ஏப்ரல் 19, 2020 11:35

புதுச்சேரி: புதுச்சேரியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு 4 சப்பாத்தி, குருமாவுடன் உணவு வழங்கும் நடமாடும் வாகனத்தை முதல்வா் நாராயணசாமி தொடக்கி வைத்தாா்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில், மாஹேவை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். புதுச்சேரியில் தற்போது 4 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 1,184 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 1,017 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 17 நாட்களில் புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும், கொரோனா வைரசை விரைவாக கண்டறிவதற்காக, 4 ஆயிரம் ரேபிட் கிட் கருவி புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில், புதுச்சேரியைச் சோ்ந்த அன்ன பிரதோஷண தொண்டு நிறுவனம், புதுச்சேரியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, நடமாடும் வாகனம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்க முன் வந்தது.
இந்த நடமாடும் வாகனத்தில் 4 சப்பாத்தி, பருப்புக் கூட்டு ரூபாய் 10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாா் செய்யப்பட்டு, தன்னாா்வலா்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை நடமாடும் உணவு வாகனத்தின் முதல் விற்பனையை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் தொடக்கி வைத்தாா்.

இந்த சேவை குறித்து அன்னபிரதோக்ஷனா சேவை அறக்கட்டளை நிறுவனர் பிரவீன்குமார் தெரிவித்ததாவது:
நாங்கள் கடந்த சில வருடங்களாக திருமண மண்டபங்களில் உபரியாகும் உணவுகளை சேகரித்து, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறோம். மேலும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களில் அரசுடன் இணைந்து மியேவாக்கி குருங்காடுகள் உருவாக்கி வருகிறோம். அதேபோல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஊரடங்கு பிறப்பிக்கப்ட்ட நாளிலிருந்து, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம்.

இதேபோல் சாமானிய மக்களுக்கும் உணவு தொடர்ந்து கிடைத்திட வேண்டுமென் எண்ணினோம். ஆனால் மக்கள் இலவசமாக தரும் உணவை வாங்க யோசித்த நிலையில் , அவர்களின் கண்ணியம்காக்க இந்த அமிழ்தம் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் மிக குறைந்த விலையில் 4 சப்பாத்தி மற்றும் பருப்பு குருமா ரூபாய் 10 க்கு தருகிறோம். இதனால் தினக்கூழி, வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் மற்றும் தனி நபர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்