Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீர்காழியில் கணவருடன் சேர்ந்து கடைகளில் வசூல் நடத்திய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஏப்ரல் 19, 2020 11:51

திருவாரூர்: சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவதாக கடைக்காரர்களை மிரட்டி கடந்த சில நாட்களாக போலீஸ் கணவருடன் சேர்ந்து பணம் வசூல் செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவர் ஆகிய, இருவரையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர (குறிப்பிட்ட நேரம் மட்டும்) அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்த பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (46). இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீ பிரியா இவர் சீர்காழியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீபிரியாவும், சோமசுந்தரமும் காதல் திருணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிற்கு கொரோனா பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர் அந்த பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தனது கணவர் சோமசுந்தரத்துடன் தங்களுக்கு சொந்தமான காரில் திருவெண்காடு பகுதியில் பல்வேறு கடைகளுக்கு சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு செல்வநாகரத்தினம் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா பணம் வசூலித்ததாக கூறப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று கடைகளில் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பெண் இன்ஸ்பெக்டர் தனது கணவருடன் சேர்ந்து பணம் வசூலித்தது உறுதியாது. இந்த அறிக்கையை உயரதிகாரிகளிடம் அந்த காவல் அதிகாரி அளித்தார்.

இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, அவரது கணவர் ஏட்டு சோமசுந்தரம் ஆகிய இருரையும் கடைக்கார்களிடம் பணம் வசூலித்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால், இருவரையும் பணியிட நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்