Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து மீண்ட 5 பேர்: வழியனுப்பிய ஆட்சியர், மருத்துவ பணியாளர்கள்

ஏப்ரல் 19, 2020 11:54

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து மீண்ட 5 பேரை ஆட்சியர் மற்றும் மருத்துவக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தமிழக அரசு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணியினை ஆய்வு செய்வதற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கருணாகரனை தமிழக அரசு நியமித்திருந்தது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை சென்ற அவர், கொரோனாவிலிருந்து மீண்ட 5 பேரை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.  கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மருத்துவக்குழுவினர் பழக்கூடை கொடுத்தனர்.
இதை தொடர்ந்து கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கருணாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நேற்று) 5 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 13 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டுக்கு அனுப்பி‌ வைக்கப்பட்டவர்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த 4 பேர், தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்