Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் சாலை விபத்து மரணம், தற்கொலைகள் குறைந்தது

ஏப்ரல் 19, 2020 11:57

ஈரோடு: தமிழகத்தில் ஊரடங்கு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் பட்டினியால் வாடுவோர் பலர் இருந்தாலும் விபத்து உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் ஈரோடு மாவட்டத்தில் முற்றுலும் குறைந்துள்ளன.

கொரோனோ பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு கடந்த மாதம் 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் செயல்படாததால் வியாபாரம் முடங்கி,  வேலையிழந்து ஏழை மக்கள், தொழிலாளர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஊரடங்கு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் பல்வேறு தரப்பு மக்களும் வாழ்வாரத்தை இழந்து தவித்து வந்தாலும், இந்த கால கட்டத்தில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் முற்றுலுமாக குறைந்துள்ளன.

ஈரோடு ஆத்மா மின் மயானத்திற்கு  மாதந்தோறும் 200 முதல் 250 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 150 உடல்கள் மட்டும் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் மின் மயான ஊழியர்கள். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கடந்த ஒரு மாத காலத்தில் விபத்து உயிரிழப்பு, தற்கொலை சாவுகள் முற்றுலுமாக இல்லை. கடந்த ஒரு மாதத்தில் இங்கு தகனம் செய்யப்படும் உடல்கள் பெரும்பாலும் 70 வயதைக் கடந்தவர்கள் தான்.  அனைவருமே வயது மூப்பின் காரணமாக இயற்கை மரணம் அடைந்தவர்கள் தான்.  
இதுபோல் கோபி மின் மயானத்தில் மாதம் 70 முதல் 80 உடல்கள் தகனம் செய்யப்படும். கடந்த ஒரு மாத காலத்தில் இந்த எண்ணிக்கை 50-க்கு குறைந்துள்ளது. வயது மூப்பு காரணமாக நேரிடும் இயற்கையாக இறந்தவர்களின் உடல் தான் இப்போது வருகிறது. காவல்துறை குறிப்பாணையுடன் கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு உடல் கூட வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

விபத்து மரணங்கள், தற்கொலை வழக்குகள் பதிவு இல்லை.  கடந்த 25 நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் 30க்கும் குறைவான விபத்து வழக்குகள் தான் பதிவாகியுள்ளன. அதிலும் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்கொலை சாவு குறித்த வழக்கும் 10க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மற்ற நாட்களில் தினமும் 2 முதல் 5 விபத்து மரணங்கள், அதே எண்ணிக்கையில் தற்கொலை சாவு குறித்த வழக்குகள் பதிவாகும் என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் பொதுவாக விபத்து சாவு, தற்கொலை போன்றவற்றுக்கு மதுப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. மதுப்பழக்கத்தினால் ஏற்படும் குடும்பப் பிரச்னையால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. மதுக்கடைகள் இல்லாதால் குடும்ப பிரச்னைகள் குறைந்துள்ளது. இதுபோல் வாகனப் போக்குவரத்து முடக்கத்தால் விபத்துகளும் குறைந்துள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்