Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 31 வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்யக்கூடாது; வாசன்

ஏப்ரல் 19, 2020 02:08

சென்னை: மே மாதம் 31 ஆம் தேதி வரை சுங்கக்கட்டணத்தை வசூல் செய்யாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலும் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் பல்வேறு பொருட்களை, சரக்குகளை சாலை மூலமாக கொண்டு செல்லும் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுங்கக்கட்டண வசூலைத் தொடங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது நியாயமில்லை.

ஏப்ரல் 20-க்குப் பிறகு கோட்பாடுகளுக்கு உட்பட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயக்கப்பட இருக்கின்ற வேளையில், வாகனங்களை இயக்க வேண்டிய நிலையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்வது தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்க வாய்ப்புண்டு.

கடந்த 26 நாட்களாக வாகனங்களை இயக்க முடியாமல், வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதாரப் பிரச்சினையில் உள்ள வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் இப்போதைய அசாதாரண சூழலில் சுங்கக் கட்டணம் செலுத்துவது சிரமமானது.

எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மீண்டும் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளதை தவிர்க்கவும், குறைந்தபட்சம் மே மாதம் 31 ஆம் தேதி வரை சுங்கக்கட்டணத்தை வசூல் செய்யாமல் இருக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்