Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் நாளை முதல் இயங்கும்

ஏப்ரல் 19, 2020 02:21

சென்னை: அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் இயங்கும் என்று பதிவுத் துறை தலைவர் ஜோதிநிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20 -ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அனுமதித்து அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஏப்.20-ம்தேதி முதல் அனைத்து சார்- பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்-பதிவாளர் அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பதிவுத் துறைத் தலைவர் ஜோதிநிர்மலா சாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

அலுவலக வாயிலில் சோப்பு, தண்ணீர் வைத்து கைகழுவிய பின்பொதுமக்களை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் கையுறை, முகக்கவசம் அணிவதுடன், பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். புகைப்படம் எடுக்கும்போது முகக் கவசத்தை அகற்றிக் கொள்ளலாம்.

சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக பதிவுகளை மேற்கொள்ள ஒரு மணிநேரத்துக்கு 4 டோக்கன் வீதம் தினசரி 24 டோக்கன்கள் அளிக்கும் வகையில் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பதிவு செய்த காலத்தில் வரவில்லை என்றால், அடுத்த இடைவெளியில் பதிவு செய்யலாம். 5 மணிக்குப்பின் ஆவணப்பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆவண பதிவுக்கு தாக்கல் செய்தவரை முதலில் அனுமதித்து, சரிபார்த்த பின் மற்றவர்களை அனுமதிக்கலாம். ஒரு பதிவு முடிந்து சம்பந்தப்பட்டவர்கள் வெளியேறிய பின் அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகள் பதிவுஎல்லைக்குள் வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து சார்-பதிவாளர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர், கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் அந்த ஆவணத்தை பதிவுக்குபரிசீலிக்க வேண்டாம். கட்டுப்பாட்டு பகுதிக்குள் சார்-பதிவாளர் அலுவலகம் வந்தால், அருகில் உள்ள வேறு அலுவலகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம். கட்டுப்பாட்டு பகுதிக்குள் வசிக்கும் நபரை பணியாற்ற அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்