Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இதயமற்ற அரசு மட்டுமே ஒன்றும் செய்யாது: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

ஏப்ரல் 19, 2020 04:00

சென்னை: “பணத்தை இழந்த மக்கள், இலவசமாக விநியோகிக்கப்படும் உணவை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், இதயமற்ற அரசாங்கம் மட்டுமே ஒன்றும் செய்யாது,” என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிந்த நிலையில் , மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பபட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் சுமார் 40 நாட்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பணத்தை இழந்து, வேலை இழந்து உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளதாவது:
அதிகமான மக்கள் பணத்தை இழந்துவிட்டார்கள் என்பதற்கும், சமைத்து விநியோகிக்கப்படும் இலவச உணவை சேகரிப்பதற்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதயமற்ற அரசாங்கம் மட்டுமே ஒன்றும் செய்யாது.

ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் பணத்தை அளிப்பதன் மூலம் அரசாங்கத்தால் அவர்களை பசியிலிருந்து காப்பாற்ற முடியாதா?. அத்துடன் அவர்களின் கௌரவத்தை பாதுகாக்க முடியாதா? உணவு தானியங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு 77 மில்லியன் டன் தானியங்களில் ஒரு சிறிய பகுதியை எஃப்.சி.ஐ உடன் அரசு ஏன் விநியோகிக்க முடியாது? மொத்த தேசமும் உதவியற்ற நிலையில் இருக்கும் நிலையில், பொருளாதார மற்றும் தார்மீக கேள்விகளான மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதில் அளிக்க தவறி உள்ளனர்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்