Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ

ஏப்ரல் 20, 2020 07:26

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் திடீரென சுங்கச்சாவடிகளை திறந்து வசூல் செய்வதும், வசூல் கட்டணத்தை உயர்த்தியுள்ளதையும் உடனடியாக விலக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கை: “கொரோனா கொள்ளை நோய் பரவலைத் தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் நீடித்து வருகின்றது. நாடு முழுவதும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அச்சத்தை உருவாக்கி, கோடிக்கணக்கான ஏழை எளியோரின் வாழ்வாதாரங்களைப் பறித்துள்ள கொரோனாவிலிருந்து மீள்வது எப்போது என்ற வினாவுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒருமாத காலமாக வேலையின்றி தவிக்கின்றனர். விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், மக்களைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அவர்களை துயரப் படுகுழியில் தள்ளி வருவது கண்டனத்துக்கு உரியது.

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு சிறிது தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 48க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் தொடரும் என்றும், அதில் 26 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 12 விழுக்காடு வரை கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 8.50 லட்சம் சரக்கு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழிப்பறி போல நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து வருவதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை.

கொரோனா தொற்று நோய் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்காலம் பற்றிய கவலை அதிகரித்துள்ள நிலையில், சுங்கச் சாவடி கட்டணம் வசூல், கட்டணம் அதிகரிப்பு என மத்திய அரசு மக்களை வாட்டி வதைப்பதை ஏற்கவே முடியாது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை மத்திய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்