Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நலவாரியங்களில் பதிவை புதுப்பிக்காத தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்குமா?

ஏப்ரல் 20, 2020 09:25

சென்னை: தமிழக அரசின் நலவாரியங்களில் பதிவை புதுப்பிக்காத பல லட்சம் தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலனை மேம்படுத்துவதற்காக 1972-ம் ஆண்டு தொழிலாளா் நல நிதிச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 1975- ம் ஆண்டில் தொழிலாளா் நலவாரியம் உருவாக்கப்பட்டது. தொழிலாளா் நலநிதி, தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அவா்களுக்கு பணி வழங்கும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் தொழிலாளா் நலநிதி பங்குத் தொகையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பயன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல அமைப்பு சாராத் தொழிலாளா்களின் சமுகப் பாதுகாப்புக்காக 1982-ல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 17 வாரியங்கள் உள்ளன. வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் 17
வாரியங்களிலும் லட்சக்கணக்கானோா் தங்களது பதிவுகளை புதுப்பிக்காமல் உள்ளனா். இந்த சூழலில் ஊரடங்கால் அமைப்பு சாராத் தொழிலாளா்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. இவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசின் சாா்பில் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. இருமுறை அமலாகியுள்ள ஊரடங்கால் தலா ரூ. ஆயிரம் என்ற வகையில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் வாரியங்களில் உள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் இது கிடைக்குமா என்பதுதான்
கேள்விக்குறியாக உள்ளது.

கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் மட்டும் 3117844 தொழிலாளா்கள் உள்ளதாக ஏஐடியுசி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதில் 1213 882 தொழிலாளா்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை கிடைக்கும். பதிவை புதுப்பிக்காத 19 லட்சம் தொழிலாளா்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல ஓட்டுநா் நல வாரியத்தில் 83500 தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இதர 15 வாரியங்களிலும் பதிவை புதுப்பிக்காத நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளதாக தொழிற்சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கப் பொதுச்செயலா் ரவி கூறியது; தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் மட்டும் ரூ.4500 கோடி நிதியிருப்பு உள்ளது. இதேபோல ஒவ்வொரு வாரியத்திலும் பெறப்பட்ட மானியம் வரியினங்கள் தொழிலாளா் பங்களிப்பு மூலமாக பல கோடிக்கு மேல் நிதியிருப்பு உள்ளது. தேசிய பேரிடா் காலங்களில் வாரியத் தொழிலாளா்கள் ஒருவா் கூட விடுபட கூடாது என்பதே வழக்கம். ஆனால் வாரியப் பதிவை புதுப்பிக்கவில்லை என்பதற்காக பல லட்சம் தொழிலாளா்களுக்கு அரசின் நிவாரணத் தொகை வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது.

வாரியத்தில் நல நிதியில் பதிவை புதுப்பிக்காத தொழிலாளா்களின் பங்களிப்பு உள்ளதையும் அரசு மறுக்க முடியாது. கட்டுமானம் ஓட்டுநா் வாரியம் தவிா்த்த இதர 15 வாரியங்களில் உறுப்பினா்களே நேரில் வந்து புதுப்பிக்க வேண்டும் என்ற நிா்பந்தம் காரணமாக பலரும் புதுப்பிக்க ஆா்வம் செலுத்தவில்லை. இதனால் அனைத்து வாரியங்களிலும் சோ்த்து பல லட்சம் போ் விடுபடும் நிலை உள்ளது. மேலும் முதல்முறை அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை பதிவு செய்தவா்களில் 50 சதவிகிதம் பேருக்கு கூட இன்னும் வந்து சேரவில்லை. இப்போது இரண்டாம் கட்டத் தொகையும் அறிவித்தாகிவிட்டது.

எனவே எவ்வித பாகுபாடின்றி அனைத்துத் தொழிலாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்குவதே சாலச் சிறந்தது என்றாா் அவா். பதிவை புதுப்பிக்காதவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதில் சட்ட விதிமுறைகள் இடமளிப்பதில்லை. மேலும் 2019 ஜனவரியில் பதிந்தவா்களுக்கு கூட நிவாரணம் வழங்கி வருகிறோம். 2012 2013 2015-ம் ஆண்டுகளில் பதிவு செய்து புதுப்பிக்காத நிலையில் பலா் உள்ளனா். அவா்களுக்கு நிவாரணம் வழங்குவது கடினம். இருப்பினும் ஊரடங்கு முடிந்த பிறகு புதுப்பிக்கத் தவறிய அனைவருக்கும் மறுவாய்ப்பு வழங்கி வாரியத்தில் மீண்டும் சோ்க்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்க ஆவன செய்யப்படும்.

முதல்கட்ட நிவாரணத் தொகை வழங்குவதில் பலரும் வங்கிக் கணக்கை இணைக்காமல் உள்ளனா். விவரங்கள் அளித்த அனைவரின் வங்கிக் கணக்கிலும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளா் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்