Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகள் மீது வழக்கு

ஏப்ரல் 20, 2020 09:30

திருச்சி: திருச்சியில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு கூட்டம் கூட்டமாக வருவதை தடுக்க 11 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இறைச்சி கடைகளில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்து விதமான இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தடையை மீறி திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். கல்லுக்குழி சேதுராமன்பிள்ளை காலனி அருகே கோழி இறைச்சி கடையை திறக்க ஊழியர்கள் முயற்சி செய்தனர். தகவலறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று அவர்களை எச்சரிக்கை செய்து இறைச்சி கடையை மூடினர். தொடர்ந்து மேலகல்கண்டார்கோட்டை, சாமிநாதன்நகர், உறையூர், வி.என்.பி.தெரு, சிந்தாமணி, அண்ணாசிலை பகுதி வெனீஸ் தெரு சத்தியமூர்த்திநகர் உள்ளிட்ட பகுதிகளில்
செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளில் சோதனை நடத்திய போலீசார் அந்த கடைகளை மூடியதோடு 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல திருவெறும்பூரை அடுத்த திருநெடுங்குளம் ஊராட்சியில் இருந்து பத்தாளப்பேட்டை செல்லும் வசந்தம் நகர் அருகே உள்ள நாராயணன் குட்டை விவசாய நிலத்தில் ஆட்டிறைச்சி விற்பனை செய்த அர்ஜுனன் தெருவை சேர்ந்த மதியழகன் (56 )என்பவரை திருவெறும்பூர் தாசில்தார்
ஞானாமிர்தம் மற்றும் வருவாய் அதிகாரி கணேசன் ஆகியோர் பிடித்து துவாக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் இறைச்சி கடை ஒன்று திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் அக்கடை மூடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்