Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி போனீங்களா.. ? கேள்வி கேட்டு கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சேலம் பெண் டாக்டர்

ஏப்ரல் 20, 2020 01:01

சேலம்: “நீங்க யாராவது டெல்லி மாநாட்டிற்கு போய் வந்தீங்களா?, உங்களாலதான் கொரோனா பரவுதுன்னு சொல்லி தனக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் லதா மறுத்துவிட்டார்,” என்று இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் கண்ணீர் மல்க சேலம் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியில் வசித்து வரும் தம்பதி ஜாவித் - சல்மா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டாகிறது.. இப்போது சல்மா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது வீட்டின் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7 மாதமாக பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார். லதா என்ற டாக்டர்தான் இவரை பரிசோதித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 8வது மாத பரிசோதனைக்கு  சென்றபோது, முஸ்லிம் என்ற கோணத்தில் சல்மாவை , டாக்டர் லதா அணுகியதாகவும், அதனால் சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சல்மா, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கர்ப்பிணி சல்மா தெரிவித்ததாவது:

கடந்த 7 மாதமாக தனியார் மருத்துவமனையில் லதா என்ற பெண் டாக்டரிடம் பரிசோதனை செய்து  வந்தேன். ஆனால், சிலநாட்களுக்கு முன் போகும்போது, “நீங்களோ, உங்க சொந்தக்காரங்களோ யாராவது டெல்லி மாநாட்டிற்கு போய் வந்தீங்களா?” என்று டாக்டர் கேட்டார். அதற்கு நான் இல்லைன்னு சொன்னேன்.

அப்போதும், உங்க ஆளுங்களாலதான் கொரோனா பரவுது. மே 3-ம் தேதிக்கு அப்பறம் தான் வரணும் என்று சொல்லி எந்த பரிசோதனையும் எனக்கு செய்யாமல் திருப்பி அனுப்பிட்டாங்க. என் உடல்நிலை பற்றி எதுவுமே கேட்காம, மதத்தை பத்தியே கேள்வி கேட்டாங்க. எனக்கு தர்மசங்கடமா இருந்தது. டாக்டர் என்றால் அவங்க பணியைத்தானே செய்யணும். முஸ்லிம் என்பதற்காகவே என்னை மே3-ம் தேதிக்கு அப்பறம் வாங்கன்னு சொல்றாங்க.

ஒரு ஸ்கேன் கூட பண்ணல. வெயிட்கூட செக் பண்ணல. போன மாசம் கூட ரத்தம் டெஸ்ட் பண்ணல, இந்த மாசம் எனக்கு ரத்தம் டெஸ்ட் பண்ணனும்னு சொன்னேன். அதையும் காதில் வாங்கிக்கல. கொரோனா பிரச்சினையெல்லாம் முடியட்டும்ன்னு சொல்லிட்டாங்க. இதனால் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.
இவ்வாறு கர்ப்பிணி பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், சேலம் மாவட்ட ஆட்சியரும் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய கிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்