Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் மது பாட்டில் திருடிய தாசில்தார் கைது: ஆர்.ஐ. உட்பட மேலும் 3 பேர் சிக்கியதால் பரபரப்பு

ஏப்ரல் 20, 2020 01:06

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடையில் ஆய்வுக்கு சென்ற தாசில்தார், தனது தேவைக்காக மதுபானக் கடையில் இருந்து மது பாட்டில்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாசில்தார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இவருடன் ஆய்வுக்குச் சென்ற ஆர்.ஐ.உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். இதனிடையே கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்பான புகார்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சென்ற நிலையில், அனைத்து மதுபானக் கடைகளையும் சீல் வைத்து, அதில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்குமாறு கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கலால்துறையினர் மதுபானக் கடைகளை சீல் வைத்து, மதுபானம் இருப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வதற்கு போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கிரண்பேடிக்கு புகார் சென்றது. இதனைதொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால், அந்த விற்பனை நடந்த காவல்நிலைய அதிகாரி காணொலி காட்சியில் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணை நிலை ஆளுநர், டி.ஜி.பி. ஐ.ஜி. முதுநிலை எஸ்.பி. ஆகியோர் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.

கிரண்பேடி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே மதுபானம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், மது திருடியதற்காகவும் தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் சரக தாசில்தார் கார்த்திகேயன். இவர் தலைமையிலான குழுவினர் மடுகரை கிராமத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கிருந்த மதுபாட்டில்களை தாசில்தார் கார்த்திகேயன் அவரது தேவைக்கு எடுத்து கொண்டதாகவும், மதுபானம் கடத்தலுக்கு உதவி செய்ததாகவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்துவந்த ஆனந்த்பாபு என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தாசில்தார் கார்த்திகேயன் மதுபானங்களை திருடியது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்றுநோயை பரப்புதல், கலால்துறை சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ் தாசில்தார் கார்த்திகேயன் மீது மடுகரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையிலான போலீசார், தாசில்தார் கார்த்திகேயனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாசில்தார் கார்த்திகேயனுடன் மதுக்கடை ஆய்வுக்கு சென்ற வருவாய் ஆய்வாளர் வரதன், எழுத்தர் சேதுராமன், டிரைவர் கருணாமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பான வழக்குகளை முறையாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருக்கனூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பானோர் மீது நடவடிக்கை தொடரும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்