Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனாவுக்கு 1520 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

ஏப்ரல் 20, 2020 03:54

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,20) ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520 ஆகவும், பலி எண்ணிக்கை 17 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6109 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 47,710 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கே அதிகம் பாதிப்பு இருந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 46 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒரு டாக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 பரிசோதனை ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டு 33 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள். இன்று ஒரே நாளில் 6109 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் பரிசோதனைகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வருவதாக பாராட்டி கூறுகிறது. அதிலும் தமிழகத்தில் சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்