Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயங்கொண்டத்தில் முழு ஊரடங்கு: குறுக்கு பாதைகளை அடைத்து போலீசார் நடவடிக்கை

ஏப்ரல் 21, 2020 08:37

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் முழு ஊரடங்கையொட்டி குறுக்கு பாதைகளை அடைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்காக மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வழக்கம்போல் செயல்பட்டு வந்தன. இதனால் வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 1 மணிக்குள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி வந்தனர். முழு ஊரடங்கு என்பதால் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசாருக்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும், சில இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக காணப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் நகரம் முழுவதும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஜெயங்கொண்டம் 4 ரோடு முன்பாக உள்ள சிதம்பரம் ரோடு அருகே தேவாங்கமுதலியார் தெரு, சேவகத்தெரு மற்றும் குறுக்கு சந்துகளையும், இதேபோல் கடைவீதி, திருச்சி ரோடு அருகே உள்ள ஜூபிலி ரோடு மற்றும் சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு
இடங்களிலும் முட்கள் மற்றும் தடுப்பு அரண்கள் கொண்டு அடைத்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு போலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் குறுக்கு வழிகளில் சென்ற சில வாகன ஓட்டிகள் அந்த வழிகளையும் அடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அவ்வழியாக வந்த சிலரை போலீசார் வழிமறுத்து விசாரித்து அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்