Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த அதிகாரியுடன் ஊழியர்கள் வாக்குவாதம்: பரபரப்பு

ஏப்ரல் 21, 2020 10:27

திருச்சி: துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த அதிகாரியுடன் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வையம்பட்டி அருகே உள்ள சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் கட்டணமில்லாமல் சென்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களை தவிர கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை. பால், உணவு, பொருட்கள் மருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததோடு சுங்கச்சாவடிகள் செயல்படலாம் என்றும் அறிவித்திருந்தது.

தொடர்ந்து திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி செயல்பட தொடங்கியது. அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி தமிழக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் காரில் வந்தார். அந்த காரை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த அதிகாரி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த அதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அவரது காரின் பின்னால் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிகாரி வந்த காரை செல்ல அனுமதித்தனர். பின்னர் மற்ற வாகனங்களில் சென்றவர்கள் கட்டணம் செலுத்தி சென்றனர்.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னம்பலம்பட்டியில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்கள் கட்டணமில்லாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்