Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா உணவகத்தை அரசு நிதியில் நடத்த வேண்டும்; அ.தி.மு.க. நிதியில் நடத்தக்கூடாது: கே.எஸ்.அழகிரி

ஏப்ரல் 21, 2020 12:24

சென்னை: “அம்மா உணவகத்தை தமிழக அரசு நிதியில் தான் நடத்த வேண்டுமே தவிர, அ.தி.மு.க. நிதியில் நடத்தக்கூடாது. அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க அ.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா?”என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவந்த அம்மா உணவகங்கள் அனைத்திலும் அ.தி.மு.க. சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

அம்மா உணவகங்கள் மூலமாக மலிவான விலையில் ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட திட்டமாகும். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அத்திட்டத்தின் மீது உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும், போதிய நிதி ஒதுக்காத நிலையிலும் அம்மா உணவகங்கள் முடங்கிய நிலையில் வரவேற்பில்லாமல் இருந்தது. தற்போது திடீரென்று அம்மா உணவகத்தின் மூலமாக அ.தி.மு.க. கட்சியின் மூலமாக விலையில்லா உணவு வழங்க அனுமதிப்பது பாரபட்சமானது, ஒருதலைப்பட்சமானது.

அம்மா உணவகத்தை தமிழக அரசின் நிதியிலிருந்துதான் நடத்தவேண்டுமே ஒழிய அ.தி.மு.க. கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோத செயலாகும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க அ.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? அம்மா உணவகம் என்பது அரசுக்கு சொந்தமானது. அதை ஆளுங்கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும்.

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் ஏற்கனவே நடத்தியதைப்போல அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் இலவச உணவளிக்க அ.தி.மு.க. விரும்பினால் அம்மா உணவகத்தை தவிர்த்துவிட்டு மற்று அரசியல் கட்சிகள் வெவ்வேறு இடங்களை எப்படி தேர்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குகிறதோ, அத்தகைய நடவடிக்கையைத்தான் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்