Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர்கள், களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை: முதல்வர்

ஏப்ரல் 21, 2020 01:52

சென்னை : டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும், தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் எனவும் முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மருத்துவ பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை ஈத்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான நடந்த ஓரிரு சம்பவங்கள், மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

தன்னலம் கருதாமல், மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள், இனியும் நடக்காமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். டாக்டர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும், அவர்களின் பக்கம் அரசு முழுமையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்