Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளித்தலையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஏப்ரல் 22, 2020 06:18

குளித்தலை: குளித்தலையில் புகையிலை பொருட்கள் விற்ற மளிகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து ரூ.42 ஆயிரம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மளிகை கடைகளை அதன் உரிமையாளர்கள் திறந்து வைத்துள்ளனர்.

இதனால் குளித்தலை பகுதியில் 144 தடை உத்தரவை யாரேனும் மீறி செயல்படுகிறார்களா அல்லது நேரத்திற்கு மாறாக கடைகளை திறந்து வியாபாரம் நடக்கிறதா என குளித்தலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக குளித்தலை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மளிகைகடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அந்த மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குளித்தலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த கணேசன் (53) என்பதும் புகையிலை பொருட்கள் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்டதாகவும் குளித்தலையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.42 ஆயிரத்து 696 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்