Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டை திட்டத்தில் பெரும் குழப்பம்

ஏப்ரல் 22, 2020 07:20

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் காய்கறி வாங்குவதற்கு வினியோகம் செய்யப்பட்ட அடையாள அட்டை திட்டத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

திருச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக தென்னூர், அண்ணாநகர், கே.கே.நகர், உழவர் சந்தைகள் மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், இ.பி. சாலை, மதுரம் மைதானம், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி மைதானம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கின் முன்பகுதி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தற்காலிக மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் வந்து கூடுவதால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பொதுமக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதற்காக மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கும் இளஞ்சிவப்பு மஞ்சள் வெளிர் நீலம் இளம்பச்சை வெள்ளை ஆகிய 5 வண்ணங்களில் அடையாள அட்டை வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளஞ்சிவப்பு நிற அடையாள அட்டை பெற்றுள்ள மக்கள்
தங்களது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக சந்தையில் திங்கட்கிழமையிலும் மஞ்சள் நிற அட்டை பெற்றுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையும் வெளிர் நீலம் நிற அடையாள அட்டை பெற்றிருப்பவர்கள் புதன்கிழமையும் இளம்பச்சை நிற அட்டை வைத்து இருப்பவர்கள் வியாழக்கிழமையும் வெள்ளை நிற அடையாள அட்டை வைத்து இருப்பவர்கள் வெள்ளிக் கிழமையும் தங்களது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக சந்தைகளில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டாலும் பல வீடுகளுக்கு அதற்கு முந்தைய தினம் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதனால் அடையாள அட்டை கிடைக்காத மக்கள் தங்கள் பகுதி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்கு சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். நேற்றும் இதே போன்ற நிலை தான் இருந்தது.

மாநகராட்சியின் ஒரு வார்டில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நாளில் குறிப்பிட்ட ஒரு சந்தையில் மட்டும் அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க முடிவதில்லை. திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் வார்டு எண் 38 மற்றும் வார்டு 41-ல் ஒரு பகுதி மக்கள் திங்கட்கிழமை காய்கறி வாங்குவதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வந்து விட்டதால் கட்டுங்கடங்காத கூட்டம் காணப்பட்டது. போலீசாரும் அடையாள அட்டைகளை வாங்கி பார்த்து அனுப்ப முடியாமல் திணறினார்கள்.

இ.பி. சாலை மதுரம் மைதானத்தில் உள்ள காய்கறி சந்தையில் செவ்வாய்க் கிழமை 19 20 21 ஆகிய 3 வார்டு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்ததால் அங்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மொத்தத்தில் இந்த புதிய திட்டத்தின்கீழ் அனைத்து மக்களுக்கும் அடையாள அட்டை கிடைக்காமல் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியாத நிலை போன்றவற்றினால் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றே சொல்லலாம்.

எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாளும் ஒரு வார்டின் குறிப்பிட்ட தெரு மக்களை மட்டும் அனுமதிக்கும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

தலைப்புச்செய்திகள்