Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகன மேடையில் பாதுகாப்பு உடை அணிந்து உடலை எரியூட்டிய ஊழியர்கள்

ஏப்ரல் 22, 2020 07:34

திருச்சி: பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் மணப்பாறையில் உள்ள எரிவாயு தகன மேடையில் பாதுகாப்பு உடை அணிந்து பிணத்தை ஊழியர்கள் எரியூட்டினர்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல நேரிடும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டரின் உடலை ஏற்றிக் கொண்டு அடக்கம் செய்ய சென்ற வேனை சிலர் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படும்போது அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மருத்துவ ஊழியர்கள் செய்து தான் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். அதனை புரிந்து கொள்ளாமல் ஒருசிலர் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்பதை புரிய வைக்கும் வகையிலும் இறந்தவர்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் பணியில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து மணப்பாறை பகுதியில் இறந்த ஆண் ஒருவரின் உடலை எரியூட்டினர்.

இதுகுறித்து எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரும், முன்னாள் ராணுவ வீரருமான ஜி.என்.ஆர்.ஸ்ரீதரன் கூறுகையில்; இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி நடந்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். அரசு கூறியிருக்கின்ற அறிவுரைகளின்படி தான் இறந்தவர் உடலை எரியூட்டி வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்றித்தான் உடலை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். 

எரிவாயு தகன மேடைக்கு 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பிணத்தை எரியூட்டும் ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து தான் பணியாற்றுகிறார்கள். இறந்தவர்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்