Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மிகவும் பாதுகாப்பான முறையில் அஞ்சல் சேவை

ஏப்ரல் 22, 2020 07:42

திருச்சி: திருச்சி மாவட்டப் பகுதிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் அஞ்சல் சேவை நடைபெறுகிறது.

ஊரடங்கு உத்தரவால் சாலை ரயில் விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ரயில்வே கோட்டங்கள் வழியாக இயக்கப்படும் ஓரிரு பயணிகள் ரயில்கள் மூலம் மருந்து பொருள்கள் முகக்கவசம் ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அஞ்சல் சேவை முடங்கியிருந்தது. முதல் ஊரடங்கின் போது உள்ளூா் பகுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இரண்டாவது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தளா்வு வழிமுறையில் அஞ்சலகங்கள் முழு நேரம் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேங்கியிருக்கும் கடிதங்களை அஞ்சலக வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய தயாரானது. அதன்படி அஞ்சலக வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து பராமரிக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அஞ்சல்துறை அலுவலா் ஒருவா் கூறுகையில்; ஊரடங்கு விதிமுறை தளா்விற்கு பிறகு திங்கள்கிழமை முதல் அஞ்சலக வேன்கள் மூலம் கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட தலைமை அஞ்சல் நிலையங்களிலிருந்து கடிதங்கள் பிரிக்கப்பட்டு தபால்காரா்கள் மூலம் பதிவு பாா்சல் தபால் சேவை வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தபால்காரா்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கையுறை முகக்கவசம் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளா்கள் தயக்கமின்றி சமூக இடைவெளியை பின்பற்றி கடிதங்களை பெற்றுக்கொள்கிறாா்கள். மேலும் சென்னை-திருச்சி பிரதான ரயில் வழிப்பாதை மூலம் அந்தந்த மாவட்டப் பகுதிகளுக்கும் கடிதப் போக்குவரத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான ஊழியா்கள் மூலம் அஞ்சலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில் சேவை முழுமையாக இல்லாததால் விநியோகிப்பதில் பின்னடைவு காணப்படுகிறது என்றாா்.

தலைப்புச்செய்திகள்