Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைகள் நிறுத்தம்: தமிழக சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு

ஏப்ரல் 22, 2020 08:00

சென்னை: “தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் நேற்று முதல் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது,” என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே வருகிறது. இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா?, உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்திகள் உள்ளன? என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் டெஸ்ட் கருவிகளும் நம்மிடம் இல்லை. அதனால்தான், எதிர்ப்புச் சக்தி உள்ளதா? என்பதை வெறும் அரை மணி நேரத்தில் கண்டுபிடித்து தெரிவிக்கும் நவீன ரேபிட் டெஸ்டிங் கிட்-களை சீனாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. 3 லட்சம் கருவிகள் 2 தினங்களுக்கு முன் தருவிக்கப்பட்டன.. அவைகள் மாநிலங்களுக்கு பிரித்தனுப்பும் பணி நடந்து, அதன்படி டெஸ்ட்களும் துரிதமாயின.

தமிழகத்துக்கும் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்டிங் கருவிகளும், மத்திய அரசிடம் இருந்து 12 ஆயிரம் கருவிகளும் வந்திருந்தன. அதனால் கடந்த 2 நாட்களாக டெஸ்ட்டுகளும் வேகமாக நடந்து வந்தன. ஆனால் ராஜஸ்தானில் மக்களுக்கு இதை வைத்து டெஸ்ட் செய்யும்போது தவறான முடிவுகள் வந்துள்ளதாக கூறி ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு பிறகுதான், ரேபிட் டெஸ்டிங் முறையை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து உடனடியாக மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அசாம், அரியானா மாநிலங்களில் இந்த ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்திலும் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டது. ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 34,000 ரேபிட் கருவிகள் தமிழகத்தில் கைவசம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கூடி வரும் நிலையில், டெஸ்ட்டுகளும் நிறுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் தமிழக அரசு தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான டெஸ்ட்களை எடுக்கும் பணியை பல்வேறு வகைகளில் துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்