Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுப்பாடுகள் தளர்த்தியதால் வந்த விபரீதம்!: கேரளாவில் மீண்டும் தலைதுாக்கும் கொரோனா வைரஸ்

ஏப்ரல் 22, 2020 11:21

கேரளாவில் மீண்டும் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தான் இந்த நிலைமை என்ற குற்றச்சாட்டுக்கும் கேரள அரசு ஆளாகியுள்ளது.

கேரளாவில் கடந்த வாரம் முழுக்க கொரோனா தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று எல்லோரும் பாராட்ட தொடங்கினார்கள். உலக நாடுகள் கூட கேரளாவின் செயல்பாடுகளை பாராட்ட தொடங்கியது. அதிலும் கடந்த வாரம் முழுக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு கேஸ்கள் என்று ஒற்றைப்படையில் மட்டுமே கேரளாவில் கேஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கேரளா மொத்தமாக கொரோனாவில் இருந்து விடுபட போகிறது என்று கூறப்பட்டது.

ஆனால், கேரளாவில் திடீர் என்று நேற்று மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேரள மக்களை இந்த புதிய கேஸ்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கேரளாவில் நேற்றுமுன்தினம் மட்டும் 19 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கேரளாவில் மொத்தம் 36,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கண்ணூரில் 10 பேர், பாலக்காட்டில் 4 பேர், காசர்கோட்டில் 3 பேருக்கு கொரோனா வந்துள்ளது. கொல்லம் மற்றும் மலப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் காசர்கோட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.கண்ணூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் அங்கு நோயாளிகள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து வந்த பின் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் 28 நாட்கள் கழித்து இப்போது கொரோனா அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது கொரோனா உருவாகும் அந்த 28 நாட்கள் அவகாசத்தை தாண்டியும் இப்படி கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதுதான் கேரள மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால் இந்த தனிமைப்படுத்தப்படும் நாட்களை அதிகரிக்க கேரள அரசு யோசனை செய்து வருகிறது. ஏனென்றால் தனிமைப்படுத்தும் காலம் குறைவாக இருந்து அதற்கு பின் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அதன் மூலம் மேலும் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கேரளாவில் கொரோனா தாக்குதல் கொஞ்சம் குறைவானவுடன் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வர தொடங்கினார்கள். மத்திய அரசு இதை எச்சரித்து இருந்தது. இதனாலும் கூட அங்கு கொரோனா கேஸ்கள் பரவ வாய்ப்புள்ளது. மீண்டும் அங்கு கடுமையான லாக்-டவுன் கொண்டு வரப்பட வேண்டும் என்கின்றனர்.

அதேபோல், கேரளாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் இரண்டாம் நிலை. இது ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும். இதனால் பலர் முன்பை விட அதிகமாக கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்