Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரக பொருளாதார நிலையில் பல கோடி ரூபாய் பாதிப்பு: கொரோனாவால் முடங்கிய கால்நடை சந்தைகள்!

ஏப்ரல் 22, 2020 11:25

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடைச் சந்தைகள் முடங்கியதோடு ஊரகப்பகுதி பொருளாதார நிலை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கால்நடைச் சந்தைகள் மூலம் வாரத்திற்கு பல கோடி ரூபாய் ஊரகப்பகுதிகளில் புழக்கத்தில் இருந்த நிலை அடியோடு சரிந்துள்ளது.  இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் அவதிப்படுவதுடன் கால்நடைகளை பராமரிக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாரம்தோறும் கால்நடைச் சந்தை நடைபெறும் இடங்களில் மணப்பாறை, உளுந்தூர்பேட்டை, வாழப்பாடி, காரியாபட்டி, காங்கேயம், நாட்ராம்பள்ளி, கருர் உப்பிடமங்கலம் உள்ளிட்ட சந்தைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. முழுக்க முழுக்க ஊரகப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த இடங்களில் நடைபெறும் சந்தைகள் ஒவ்வொன்றிலும் பல லட்சம் ரூபாய் வரை பணப்புழக்கம் இருக்கும். கறவை மாடுகள், கன்றுகுட்டிகள், ஆடு, கோழி என கால்நடைச் சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் தமிழகத்தில் வருவாய் ஈட்டி வந்தனர்.

இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்கவும் முடியாமல் அதற்கு தீனி, தீவனங்கள் போட்டு பராமரிக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரும் கூட உடனடியாக ஆடு, மாடுகள் உரிய விலைக்கு விற்பனை ஆகுமா? எனத் தெரியவில்லை என்றும் விவசாயிகளிடம் பணப்புழக்கம் இல்லாததால் யாரும் கால்நடைகளை வாங்க முன்வரமாட்டார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலை தமிழகத்தில் மட்டுமில்லை. நாடு முழுவதும் இதே பரிதாப நிலை தான் ஏற்பட்டுள்ளது.

குதிரை, ஒட்டகச்சந்தை:
குறிப்பாக உத்திர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் குதிரைச்சந்தை, ஒட்டகச்சந்தைகள் மூலம் வாரத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறும். ஆனால், கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் காரணமாக இந்த கால்நடைச் சந்தை தொழில் அடியோடு ஆட்டம் கண்டுள்ளது. இதனிடையே நிலைமை சீரடைந்து கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்யும் வரை, அவைகளை பராமரிப்பதற்காக அரசு தரப்பில் ஏதேனும் உதவிகள் கிடைத்தால் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என ஆடு, கோழி, மாடு, குதிரை, ஒட்டகம் வளர்ப்போர் தெரிவித்தனர்.

கால்நடைச் சந்தைகளை நம்பி விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல் இடைத்தரகர்கள், முகவர்கள், வேன் ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் என மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்து வருமானமின்றி பரிதவித்து வருகின்றனர். கால்நடை சந்தையின் போது காய்கறி, திண்பண்டங்கள், இறைச்சி விற்பனையும் இல்லாமல் வியாபாரிகள் பரிதவித்து காணப்படுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்