Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதார துறையில் 2715 தற்காலிக பணியாளர்கள் தேர்வு: மாதம் ரூ.20 ஆயிரம் ஒப்பந்த ஊதியம்

ஏப்ரல் 23, 2020 07:53

திருச்சி: பொது சுகாதார துறையில் கொரோனா தடுப்பு பணிக்காக 2715 பேரை தற்காலிகமாக நியமிக்க இயக்குனர் பிறப்பித்து உள்ள உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து உள்ளது.

உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. ஆனாலும் சுகாதார துறையில் பணியாற்றும் டாக்டர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இரவு, பகலாக ஓய்வு இன்றி பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதார துறையில் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக 2715 ஆண் பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கும்படி பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி உத்தரவிட்டு உள்ளார். அவர் பிறப்பித்து உள்ள உத்தரவு அனைத்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர்களுக்கும் வந்து உள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை தமிழில் படித்து விட்டு மேல்நிலைக்கல்வியை உயிரியல், தாவரவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி படைத்தவர்கள் ஆவர். மேலும் அவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் சுகாதார ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் படிப்பு வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொது சுகாதார துறை துணை இயக்குனர்கள் இந்த தற்காலிக பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சுகாதார துறையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பயன்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்