Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாசா செல்ல தேர்வான அண்ணன், தங்கை பயணம் ஒத்திவைப்பு

ஏப்ரல் 23, 2020 08:05

திருச்சி: கொரோனா பாதிப்பு எதிரொலியால் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட தேர்வான அண்ணன்-தங்கை பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை பிள்ளாதுரை நடுவாணியர்தெருவில் வசிக்கும் சுந்தரவேல்-வனிதா தம்பதியினருக்கு கிஷோர் (17) என்ற மகனும், மோகனபிரியா (14) என்ற மகளும் உள்ளனர். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் கிஷோர் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். மோகனபிரியா 9-ம்
வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு செல்ல உள்ளார். விண்வெளி தொடர்பான அறிவை வளர்க்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்தியில் இணையதளம் வழியாக அறிவுத்திறன் போட்டிகளை நடத்தி வருகிறது. 

இதில் வெற்றி பெறும் மாணவர்களை அமெரிக்கா அழைத்து சென்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுவதுடன் சான்றிதழ்கள் பரிசுகள் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்காக நாசா இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சி போட்டி அறிவித்திருந்ததை அறிந்த தா.பேட்டையை சேர்ந்த கிஷோர், மோகனபிரியா ஆகியோர் அதில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இருவரும் அமெரிக்கா செல்ல நாசா விண்வெளி நிறுவனம் 10 ஆண்டுகள் செல்லத்தக்க விசா வழங்க அனுமதி வழங்கி உள்ளது.

அமெரிக்கா செல்வதற்கான விமான போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை மாணவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் தனியார் சிமெண்டு நிறுவனம் மற்றும் மாணவர்களின் உறவினர்கள் சிலர் செலவுகளை ஏற்க முன் வந்துள்ளனர். இருவரும் அடுத்த மாதம் (மே) அமெரிக்கா செல்ல இருந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கிஷோரும் மோகனபிரியாவும் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்