Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாப்பிடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை; சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள்: குஷ்பு அறிவுரை

ஏப்ரல் 23, 2020 08:55

சென்னை: “பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுங்கள். சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டாம். ஒரு வேளை உணவு கிடைக்காமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சிரமப்படும் தருணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது,” என நடிகைகளுக்கும், சமூக வலைதள ஆர்வலர்களுக்கும் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரும் மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவதோடு அதில் தங்கள் கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

இதனிடையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் நிறைய நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்ததாவது:
ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஒரு வேளை உணவுக்கே பலரும் போராடும் நிலை உள்ளது. இது போன்ற தருணத்தில் கண்கவர் உணவுவகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது. ஏழை, எளிய மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் கூட, நமது பகட்டை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டாம்.

விரும்பிய உணவு வகைகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களை பற்றியும் சிந்தித்து சமையல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்பதே தனது கோரிக்கை.
இவ்வாறு நடிகை குஷ்பு சமூக தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்