Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. வெறுப்பு வைரஸை பரப்புகிறது: சோனியா ஆவேசம்!

ஏப்ரல் 23, 2020 09:02

“கொரோனாவுக்கு எதிராக பா.ஜ.க. வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது,” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில்  தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததாவது:
கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சமயத்திலும் மத்திய அரசுக்கு சொன்ன யோசனைகள் யாவும் ஏற்கப்படவில்லை. பா.ஜ.க. மத வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலையை தர வேண்டும். நாம் எல்லாரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில், பா.ஜ.க. அரசு இதுபோல் நடந்து வருவது வேதனையாக உள்ளது.

நமது சமூக நல்லிணக்கத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்ய எங்களுடைய கட்சி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும். நான் பலமுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் போராட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி தெரிவித்துள்ளேன். பலவித யோசனைகளையும் வழங்கி உள்ளேன். ஆனால், அவை எதுவுமே பெரிசா எடுத்து கொள்ளப்படவில்லை. பாரபட்சமாக மிகவும் மோசமான முறையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

பா.ஜ.க.வின் இந்த செயல் நாட்டில் ஒவ்வொரு இந்தியரையும் கவலையடைய செய்துள்ளது. வைரஸை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள லாக்-டவுன் நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படி பல தரப்பட்ட மக்களை அளவுக்கு அதிகமாகவே பாதித்து வருகிறது.

வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.. இதனால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடுகிறார்கள், பாதுகாப்பு சாதனங்கள், டெஸ்ட் கிட்கள் நாட்டில் இப்போதுகூட பற்றாக்குறையாக இருக்கின்றன. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும். உணவு தானியங்கள் இன்னும் 11 கோடி மக்களை சென்றடையவே இல்லை. ஒவ்வொரு மாசமும் 11 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஊரடங்கின் தாக்கத்தை மென்மையாக்குவதில் அரசு இரக்கம் காட்ட தவறிவிட்டது. மே 3ம் தேதி லாக்-டவுன் முடிகிறது. இதற்கு பிறகு அதாவது மே 3ம் தேதிக்கு பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும்.
இவ்வாறு காங்கிரஸ்  தலைவர் சோனியாகாந்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்