Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவில் மீள நோய் எதிர்ப்பு சக்தி ஒன்று தான் வழி: கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு புது யோசனை

ஏப்ரல் 23, 2020 03:32

சென்னை: “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை அரசு இலவசமாக வழங்கவேண்டும் என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருப்பது மட்டும் கொரோனா நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றாது,” என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை இல்லை என்பதை உலகமே அறியும். மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு காலமாகும் என்பதும் யாருக்கும் தெரியாது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வருமா? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. எப்போது ஊரடங்கு முடியும் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. கொரோனாவை எதிர் கொள்ளக்கூடிய எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்காமல் தைரியமாக வெளியே உலவ முடியாது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை இல்லாமல் இருந்த போதும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விகிதாசாரம் அதிகமாக இருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அது எப்படி சாத்தியம். கொரோனா தொற்றுக்கு மருந்தே இல்லை என்னும் சூழ்நிலையில் மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?. மருந்தே கொடுக்காமல் கொரோனா தொற்றிலிருந்து எப்படி காப்பாற்ற முடியும்?. யார் யாருக்கெல்லாம் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கிறதோ அவர்கள் குணமாகிறார்கள். மருத்துவ முறைகளால் அல்ல.

இதிலிருந்து நாம் தெளிவாக புரிந்து கொள்வது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவது தான் ஒரே தீர்வு. அதற்கான உணவு முறைகள் மருத்துவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது முடிந்த அளவு எதிர்ப்பு சக்தியோடு வந்தால் தான் கொரோனாவை எதிர்த்து போராட முடியும். அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன்னெடுக்கவில்லை. அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் உருவாக்கப்படவில்லை.

உலகில் கொரோனா நோய்தொற்று பரவ ஆரம்பித்து 5 மாதங்களை நெருங்குகிறோம். இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 30 நாட்களை நெருங்குகிறோம். வீட்டில் இருக்க வேண்டும். தனியாக இருக்க வேண்டும். கைதட்ட வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற அரசுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவில்லை. உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயற்கையாகவே அவர்களின் உணவு முறையினால் கொரோனாவை எதிர்க்கக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கிறது என்று.

நோயை பற்றிய தீவிரத்தையும், பயத்தையும் உணர்த்துகின்ற பிரதமர் மற்றும் முதல்வருடைய பேச்சுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றி எதையும் முன்னெடுக்காதது வியப்பளிக்கிறது. அரசாங்கமாக இருந்தாலும், தன்னார்வலர்களாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்