Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினமும் ரூ.1½ கோடி வருவாய் இழப்பு

ஏப்ரல் 24, 2020 07:32

திருச்சி: ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி திருச்சி மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.1½ கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஒட்டுமொத்த மனித குலத்தையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டது மட்டும் அல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாகன போக்குவரத்தையும் இயங்க விடாமல் செய்து விட்டது. ஊரடங்கால் தங்களது ஓட்டத்தை நிறுத்திக்கொண்ட ரயில்கள் ரயில் நிலையங்களிலும், அவற்றிற்கான யார்டுகளிலும் சத்தம் இல்லாமல் நின்று கொண்டிருக்கின்றன என்றால் அரசு பஸ்களோ அவற்றின் பணிமனைகளில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றன.

பஸ்களின் ஓய்வு காலமானது 30 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு எல்லோருக்கும் தான் என்றாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தி இருப்பதாகவே உணரப்படுகிறது. ஏனென்றால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையிலான விடுப்பை தவிர தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்த ஒரு பண்டிகைக்கும் ஓய்வே வழங்கப்படுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் பண்டிகை நாட்களில் தான் அவர்களது பணி வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.

இப்படி 24 மணி நேரமும் இரவு, பகல் என்ற பாகுபாடு இன்றி கியர்களை மாற்றி, மாற்றி இயக்கிய அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களின் கைகள் ஊரடங்கினால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. பஸ்சிற்குள் ஏறிவிட்டாலே டிக்கெட்,  டிக்கெட் என தொண்டை நோக கத்திய நடத்துனர்களும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் நிலையை ஊரடங்கு ஏற்படுத்தி விட்டது. அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலத்தில் சுமார் 900 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் அவற்றிற்குரிய பணிமனைகளில் பாதுகாப்பாக ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றன. 
அளவிற்கு மிஞ்சிய ஓய்வும் ஆபத்தில் முடிந்து விடும் என்பதால் அவற்றின் என்ஜின்கள் கெட்டு போய்விடாமல் இருப்பதற்காக 2 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த பணியாளர்கள் மூலம் நின்ற இடத்தில் இருந்தே பஸ்களை இயக்கி அவற்றிற்கு உயிர் கொடுத்து வருகிறார்கள் அதிகாரிகள். மேலும் டயர்களுக்கு காற்று பரிசோதனை செய்வது, பேட்டரிகளுக்கு ரீசார்ஜ் செய்வது முக்கியமான கருவிகளுக்கு எண்ணெய் இடுவது உள்ளிட்ட அத்தியாவசிய பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சி மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மூலம் தினமும் சுமார் 1½ கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவது வழக்கம். ஊரடங்கினால் இந்த வருவாய் அப்படியே முடங்கி போய்விட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறி வருகிறார்கள். மே 3-ந்தேதிக்கு பிறகாவது ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது அதன் பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பு வந்தால் என்ன செய்வது என்பதே இவர்களது தவிப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்