Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மருத்துவமனையில் இதுவரை 42 பேர் டிஸ்சார்ஜ்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஏப்ரல் 24, 2020 07:57

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 17 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் எல்லோரும் வேகமாக குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஒரே நாளில் 90 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளை அதிகம் குணப்படுத்தியதில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 44 சதவீதம் பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தனிபிரிவில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் நேற்றுமுன்தினம் மாலை பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பழங்கள் வழங்கியும், கைதட்டியும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்ததாவது:
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை உட்பட 7 நபர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர சிகிச்சையினால் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 35 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர்கள் தற்போது சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆக மொத்தம் இதுவரை 42 நபர்கள் குணமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 3 நபர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 4 நபர் என 17 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும், நல்ல நிலையில் உள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதராத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும், பாராட்டுகள்.  திருச்சி மாவடத்தில் உள்ள பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். வீட்டிற்கு ஒருவர்தான் வெளியே வர வேண்டும்.

தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு. என்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்