Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் குறையாத பெட்ரோல், டீசல் விலை

ஏப்ரல் 24, 2020 07:59

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலை எந்த வித மாற்றமும் இன்றி நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றம் செய்து வருவது வழக்கம். ஆனால், இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பெட்ரோல் சென்னையில் ரூ.72.28, டெல்லியில் ரூ.69.59, மும்பையில் ரூ.76.31, பெங்களூருவில் ரூ.73.55 எனவும், டீசல் சென்னையில் ரூ.65.71, டெல்லியில் ரூ.62.29,  மும்பையில் ரூ.66.21, பெங்களூருவில் ரூ.65.96 என விற்கப்படுகிறது. மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரி ஏற்றத்தால்  விலை உயர்ந்தது. கடைசியாக மார்ச் 16ல்தான் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை குறைக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் அடிப்படையில்தான் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 60 சதவீதம்  சரிந்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி உச்ச விலையை எட்டிய பிறகு, பெட்ரோல் 10 சதவீதம், டீசல் 8.5 சதவீதம் மட்டுமே  குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் தவறாமல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது அதன்  பலனை பெரும்பாலும் அளிப்பதில்லை. அதோடு, மத்திய அரசும் விலை குறைந்தபோது கூட கலால் வரியை உயர்த்தியது பெரும் சர்ச்சையையும்  விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்