Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் தாயாருக்கு கொரோனா: பூசாரிகள், போலீஸாருக்கு பரிசோதனை தீவிரம்

ஏப்ரல் 24, 2020 08:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பட்டருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகும். உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு தரிசனம் மேற்கொள்ள வருவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டு இருந்தது. ஆனால், கோவிலில் பூஜை மட்டும் தினமும் நடந்து வந்தது. ஆகம விதிப்படியும் சாஸ்திரங்களின் அடிப்படையிலும் தினமும் 6 வேலை பூஜை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலின் பட்டரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் கடந்த நான்கு மாதங்களாக எங்கும் செல்லவில்லை. வீட்டில்தான் இருக்கிறார். அவர் மிகவும் வயதானவர் என்பதால் அருகில் இருக்கும் ஊர்களுக்கு கூட செல்லவில்லை. வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில்தான் வீட்டிற்கு உள்ளேயே இருந்தவருக்கு எப்படி கொரோனா வந்தது? என்று சந்தேகம் வந்தது. இது தொடர்பாக அந்த பட்டரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் முடிவில் அந்த பட்டர் லாக்-டவுனிற்கு முன் வெளிநாடு சென்று வந்து திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு அவர் வெளிநாடு சென்று வந்ததை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார். தினமும் கோவிலுக்கு வந்து 6 வேளை பூஜை செய்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் மூலம் அவரின் அம்மாவிற்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு தற்போது கொரோனா சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சோதனை முடிவுகள் வெளியே வரும்.

இதன் காரணமாக அந்த பட்டர் வசித்து வந்த தெருவில் எல்லோருக்கும் கொரோனா சோதனை அறிகுறிகள் உள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் வீட்டில் இருக்கும் இன்னும் 7 பூசாரிகளுக்கு கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல் கோவிலில் பணியாற்றிய மற்ற பூசாரிகள், 60க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது.
இச்சம்பவம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்