Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலையின்றி.. பணமின்றி.. உணவின்றி.. முடங்கி கிடக்க மாட்டார்கள்: ப.சிதம்பரம்

ஏப்ரல் 24, 2020 08:47

சென்னை: “சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விரும்பும் குடியேறிய மக்களுக்கு அதற்கான போக்குவரத்து வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். வேலையின்றி, பணமின்றி, உணவின்றி முடங்கிக் கிடக்க மாட்டார்கள்,” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் முதற்கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கை இரண்டாம் கட்டமாக மத்திய அரசு நீடித்தது. இதனால் மஹாராஷ்டிரா, குஜராத், போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர்.

இந்த சூழலில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:

வேலையில்லாமல், உணவில்லாமல், பணமில்லாமல், 40 நாட்களுக்கு பிறகும் முடங்கி கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இதனால் அவர்கள் விரும்புகிற படி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மே 3ம் தேதிக்கு பிறகு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல ரயில்களையும், போதிய அளவில் பேருந்துகளையும் அரசு இயக்க வேண்டும். சொந்த ஊரில் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற 'தாழ்' போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்