Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு ஊரடங்கு; இன்று கடைவீதிகளில் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளது: ஸ்டாலின்

ஏப்ரல் 25, 2020 06:51

சென்னை: இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஏப்.26 முதல் ஏப்.29 வரையிலும், சேலம், திருப்பூரில் ஏப்.26 முதல் ஏப்.28 வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.25) தன் முகநூல் பக்கத்தில், "கொரோனா நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க, பல இடங்களில் 26.4.2020 தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்