Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விளையாடி கொண்டிருந்த மாணவி தீக்குளித்து சாவு: தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு

ஏப்ரல் 25, 2020 09:35

கரூர்: தீக்குளித்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அதனை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் ஊராட்சி கிழக்கு அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் மகள் மோகனபிரியா (15). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவி அருகில் சகதோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மோகனபிரியா வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனது. இதனால் அருகில் இருந்த ஒரு கார் மூலம் கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லை என கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லையாம்.

பின்னர் மீண்டும் கார் மூலம் மாணவி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு 108 ஆம்புலன்ஸ் கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த ஆம்புலன்சை சிறைபிடித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மலம்பட்டி அய்யலூரில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் குஜிலியம்பாறையிலிருந்து வர காலதாமதம் ஆனதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிகமக்கள் வசிக்கும் இந்த கடவூர் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி மோகனபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றார்.

தலைப்புச்செய்திகள்