Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருமானம் இன்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்

ஏப்ரல் 25, 2020 10:55

புதுக்கோட்டை: சீசன் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வருமானம் இன்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை பிரிவில் துவரடிமனை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு மேல் 4 தலைமுறைகளாக மண்பாண்டம் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு
முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்கள் முழு அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து நான்கு தலைமுறைகளாக மண்பாண்ட தொழில் செய்து வரும் சங்கர் என்பவர் கூறுகையில்; காலம் காலமாக நாங்கள் மண்பாண்டம் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. தற்போது தடை உத்தரவு உள்ளதால் மண்பானை அடுப்பு திருஷ்டி பொம்மை வாங்க ஆட்கள் வருவதில்லை. நாங்களும் வெளியில் சென்று மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளோம். 

தற்போது சீசன் (கோடைகாலம்) என்பதால் மண்பானை பயன்பாடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து மண்பானை செய்ய தேவையான பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைத்து உள்ளோம். ஆனால் மண்பானை செய்து விற்பனை செய்ய வழி இல்லாமலும் வருமானம் இல்லாமலும்
தவித்து வருகிறோம். எங்களது தொழிலகத்தில் 10 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது அனைவரும் வேலை இல்லாமல் இருந்து வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது என வேதனையுடன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்