Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலுக்கு செல்ல தடையால் 3500 நாட்டுப்படகு மீனவ குடும்பங்கள் பாதிப்பு

ஏப்ரல் 25, 2020 10:58

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையால் 3500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடித்து வரும் நிலையில் 3500 குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில் இந்த 3 கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மற்ற கிராமங்களை சேர்ந்த அனைத்து நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல மீன்வளதுறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்த கிராமத்து மீனவர்கள் இடையே இருந்து
வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்களின் குடும்பங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களை மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுவதாக இந்த பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொற்று இருக்கும் இடத்தில் இருந்து தங்களது கிராமம் அதிக தொலைவில் உள்ளது. அதேபோல நோய் தொற்று இருக்கும் பகுதியில் இருந்து மிக அருகில் உள்ள கிராமங்களுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டு எங்களை அதிகாரிகள் வேண்டும் என்றே பழிவாங்குவதாக இந்த பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில் தங்களது குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதாகவும் பட்டினியில் தவிப்பதாகவும் மிக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக அரசு தலையிட்டு எங்களது 3 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்