Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஸ்டர்,சூரரைப்போற்று படங்கள் நேரடி ரிலீஸா?; விலை பேசிய அமேசான்: தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 25, 2020 01:10

சென்னை: விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் பேசியதாக தெரிகிறது. இதையறிந்த தமிழ்நாடு தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகை ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஆகவில்லை. ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. லாக்-டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எப்போது புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதும் கேள்விகுறியாக இருக்கிறது. ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் கிடைக்குமா? என்பதிலும் சிக்கல். அப்படி ரிலீஸானாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா? என்பதில் குழப்பம் இருக்கிறது. இதனால், படங்களை நேரடியாக OTT-யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் இப்படி சில படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்துள்ளனர்.  அதன் அடிப்படையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தையும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடுகின்றனர். இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் வெளியிட்ட வீடியோவில், “பொன்மகள் வந்தாள் பட தயாரிப்பாளர், படத்தை OTT பிளாட்பார்முக்கு கொடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் தயாரிக்கும் படங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய படங்களை இனி, OTT-யிலேயே வெளியிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளோம்,” என்று தெரிவித்திருந்தார். இதனால் சூர்யா மற்றும் அவர் தம்பி கார்த்தி நடித்துள்ள படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் நேரடியாக டிஜிட்டலில் வெளியிட, விலை பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை, அமேசானில் நேரடியாக ரிலீஸ் செய்ய ரூ.130 கோடி வரை பேசியதாகவும் அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் சூரரைப் போற்று படத்தை, நேரடியாக ரிலீஸ் செய்ய ரூ.25 கோடி மற்றும் சேட்டிலைட்டுக்கு 15 கோடி என ரூ.40 கோடிக்கு கேட்டதாகவும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்பதால் சூர்யா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பொன்மகள் வந்தாள் படம் டெஸ்ட்தான் என்றும், இந்தப் படம் நன்றாக ஓடினால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் OTT-யை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேரடியாக OTT பிளாட்பார்மில் படங்களை வெளியிடுவது தொடர்பான பிரச்னை மேலும் வலுக்கும் என்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன், டி.டி.எச்.ல் விஸ்வரூபம் படத்தை வெளியிட முயன்றபோதும் தியேட்டர் அதிபர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்