Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரோட்டோரம் 11 லாரிகளில் ரூ.1 கோடி மது பாட்டில்கள்: உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் லாரி டிரைவர்கள்

ஏப்ரல் 25, 2020 01:12

புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான பீர் மற்றும் மது பாட்டில்கள், புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு லாரி டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபானக் கடைகள், பார்கள், கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கலால் துறையினர் மதுபானக் கடைகள் அனைத்தையும் சீல் வைத்து, சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் 24 நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 40 மதுபானக்கடைகளின் உரிமம் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் முதல் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மதுபிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மேலும் சிலர் சீல் வைக்கப்பட்டுள்ள மதுபானக் குடோன்களின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச் செல்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் லாரி நிறைய மதுபானங்களுடன் 11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடை ஒன்றிற்கு கடந்த மார்ச் மாதம் 20ம்  தேதி கோவா மாநிலத்தில் இருந்து 11 லாரிகள் பீர் ஏற்றிகொண்டு புதுச்சேரி நோக்கி வந்தன.

அவை கர்நாடக எல்லையை கடந்து ஓசூர் வந்தபோது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அந்த லாரிகளால் புதுச்சேரிக்கு வரமுடியவில்லை. எனவே, 26 நாட்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. மதுபானம் ஏற்றிச் செல்வதற்கான பர்மிட்டும் முடிந்துபோனதால், மீண்டும் பர்மிட் வாங்கி லாரி ஓட்டுநர்கள் கடந்த 18ம் தேதி புதுச்சேரி எல்லையான கோரிமேடு எல்லையை அடைந்தனர்.

ஆனால், அப்போது புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து மதுபானக் கடைகள் மற்றும் குடோன்கள் சீல் வைக்கப்பட்டதால் அவற்றை புதுச்சேரிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 18ம் தேதி முதல் அந்த லாரிகள் புதுச்சேரி எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லாரியிலும் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளை ஓட்டிவந்த ஓட்டுநர், கிளீனர் என மொத்தம் 14 பேர் அடிப்படை வசதியின்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடுவழியில் தவிக்கும் அவர்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறியதாவது:
புதுச்சேரியில் மதுபான குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், எங்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றோம். மேலும் மக்களுக்கு மதுபானம் கிடைக்காததால் தற்போது குவார்ட்டருக்கு கூட கொலை செய்யக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கும் காலகட்டத்தில் லாரி நிறைய மதுபானங்களுடன் நாங்கள் உயிரை கையில் பிடித்தபடி ரோட்டோரம் நிற்கிறோம். இரவு தூங்காமல் அதிகாலை வரை கண்விழித்திருந்து மதுபானங்களை பாதுகாக்கிறோம். எங்களது துயரத்தை போக்க புதுச்சேரி அரசு மதுபானங்களை ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் இறக்கி வைத்து எங்களை வழியனுப்பி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள்  கூறினர்.

தலைப்புச்செய்திகள்