Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்: நஷ்டஈடு கேட்டு அய்யாக்கண்ணு வழக்கு

ஏப்ரல் 25, 2020 01:26

திருச்சி: “கொரோனாவால் 10 பேர் இறந்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், விளைந்த பயிர்கள் அழிகின்றது என்ற கவலையில் 100 பேர் சாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதற்காக, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்,” என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது:
கடந்த 30 நாட்களாக கொரோனா தாக்கிவிடும் என்பதற்காக வேலைக்கு செல்லாதவர்களுக்கும் மற்ற உழைக்கும் கலைஞர்களுக்கும் ரூ.1,000, காய்கறிகள்,  உணவு பொருட்களை இலவசமாகவும், அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பாடும் கொடுக்கின்றனர். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்,  இந்த உணவுபொருட்களை லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. 

ஓர் ஏக்கர் வாழை,  வெற்றிலை  சாகுபடி, செய்ய ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை செலவாகிறது.  வாழையிலே வாழைப்பழம் பழுத்துக்கிடக்கிறது,  சூறாவளி காற்றினால் அழிந்துவிட்டது.  வெற்றிலை காய்கிறது.  விஷேசங்களும்,  உணவகங்களும் இல்லாததால் வாழை இலைகள் வாழையிலே கிழிந்து தொங்குகின்றன.

ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் செலவு செய்து நட்ட ஜூஸ் கரும்பு வெட்டுவதற்கு ஆள் இல்லாமலும்,  ஜூஸ் கடைகள் இல்லாததால் காய்கின்றது. ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்த நெல்மணியை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது. 
மல்லிகை,  ரோஜா,  செவ்வந்தி பூக்கள் மற்றும் தர்பூசணி,  முலாம்,  எலுமிச்சை,  வெள்ளரி, திராட்சை போன்ற பழங்கள் வாங்குவதற்கு  ஆள் இல்லாமலும்,  பறிக்க முடியாமலும் வயலிலேயே பழுத்து வீணாகிறது. கொடைமிளகாய் அழுகி வயலிலே வீணாக கிடக்கிறது. கொரோனாவுக்கு முகக்கவசம் தயாரிக்க மூலபொருளான  பஞ்சை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பஞ்சை விற்க முடியாமல்  நிற்கின்றனர். உளுந்து,  குச்சிவள்ளிகிழங்கு,  கடலை, மக்காசோளம் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர்.  மரம் ஏற ஆள் இல்லாமல் தேங்காயும், விற்க முடியாமல் மாங்காயும்,  பலா பழமும் வீணாகிறது. கண்ணீரை வரவழைக்கும் பெரிய வெங்காயத்தின் விலையோ கிலோ ரூ. 5 முதல் 10 ரூபாய்க்கு விலை போகிறது. 

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கும், பிரதமருக்கும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று மனு கொடுத்தும் பதில் வராததால்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் முத்துகிருஷ்ணன்,  ஸ்ரீதர் மூலம் இணையதள வழியாக வழக்கு போட்டு நிலுவையில் உள்ளது.
கடனாலும்,  விவசாய விளைபொருட்கள் அழிந்ததாலும்,  உலகில் உள்ள வல்லரசு நாடுகளை எல்லாம் மிரட்டி கொண்டிருக்கின்ற  படுபயங்கர கொரோனா வைரஸால் இறப்பவர்கள் 10 பேர் என்றால்,  தற்கொலை செய்யும் விவசாயிகள் 100 பேராக மாறிவிட கூடாது. இதற்காக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடும்,  அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசையும்,  மத்திய அரசையும் வலியுறுத்தி மறுபடியும் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்