Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்க ரோபோ

ஏப்ரல் 26, 2020 08:43

தஞ்சை: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்குவதற்காக ரோபோவை தனியார் பல்கலைக்கழகம் வழங்கியது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக ரோபோவை தஞ்சை தனியார் பல்கலைக்கழகம் தயாரித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கியது.
இதனை பெற்றுக்கொண்ட தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது;

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்க ரோபோ வழங்கி உள்ளது. இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் கொரோனா வைரசை கண்டறியும் கருவியை வழங்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் வெளியே வர 3 வண்ண அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக அதை பயன்படுத்த வேண்டும்.

இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. நடந்து தான் செல்ல வேண்டும். மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

கொரோனா பரிசோதனைக்காக ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் ரத்த மாதிரி எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனம் மூலம் ரத்தமாதிரி எடுக்கப்பட உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது தினமும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள், நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று அரிசி மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று சமுதாய பரவலை நோக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் சமுதாய பரவலை தடுப்பதற்கான வாய்ப்பு நம்மிடம் உள்ளது.. எனவே பொதுமக்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்