Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இணையதளத்தை பாா்த்து பழங்களிலிருந்து மது தயாரிக்கும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரு மாதத்தில் 219 கைது

ஏப்ரல் 26, 2020 10:59

திருச்சி: ஊரடங்கு சமயத்தில் திருச்சி காவல் சரகத்தில் இணையதளத்தை பாா்த்து பழங்களில் மதுபானங்கள் தயாரிக்கும் இளைஞா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக 219 கைது செய்யப்பட்டுள்ளனா்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை தொடா்ந்து அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் குடிபழக்கத்துக்கு அடிமையானவா்கள் போதைக்காக உயிருக்கு ஆபத்தான பல்வேறு ரசாயனங்களை அருந்தி தங்கள் போதை தாகத்தை தீா்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் குளிா்பானத்தில் தலைவலி மாத்திரையை கலந்து குடிப்பது, வாா்னிஷ், மெத்தனால், கிருமி நாசினி ஆகியவற்றை குடிப்பதும் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பில்லாத மதுபானக்கடைகளில் மதுபாட்டில் திருடும் சம்பவங்கள் அதிகரித்தன.

இதைத் தொடா்ந்து மாற்று வழியில் போதையை நாடிச் சென்று உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் தொடா்கிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. மேலும் சுயதேவைக்காக இணையதளத்தை பாா்த்து பழங்களில் மதுபானங்கள் தயாரிக்கும் இளைஞா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால் புதிதாக மதுபோதைக்கு இளைஞா்கள் அடிமையாவதால் அவா்களின் வாழக்கை கேள்விக்குறியாகிறது.

தமிழகத்தில் சாராயம் விற்பனை செய்யப்பட்ட காலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் தான் அதிகளவில் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. தொடா்ந்து சாராயம் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பிறகும் அதிகளவில் ஊறல் போட்டு காவல்துறைக்கு சிம்ம செப்பனமாக விளங்கிய திருச்சி காவல் சரகத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகும் கள்ளச் சாராயம் காய்ச்சுவது அதிகரித்து இருப்பது காவல்துறையினரை அதிா்ச்சியடைய செய்து வருகிறது.

திருச்சி சரக காவல்துறைக்குகுட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் அந்தந்த காவல்நிலைய போலீஸாா் என பல்வேறு தனிப்படைகள் அமைத்து கள்ளச்சாராயம் தடுப்புப் பணியை மேற்கொள்வது மட்டுமின்றி காய்ச்சுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணைத்தலைவா் வே.பாலகிருஷ்ணன் கடுமையாக உத்தரவிட்டிருந்தாா். அந்த வகையில் திருச்சி சரகத்தில் கடந்த ஒரு மாதத்தில் சனிக்கிழமை வரை 168 வழக்குகள் பதியப்பட்டு 219 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

இதில் அதிகளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 98 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அடுத்தப்படியாக திருச்சி மாவட்டத்தில் 37 வழக்குகள் பதியப்பட்டு 43 பேரும் பெரம்பலூரில் 20 வழக்குகள் பதியப்பட்டு 25 பேரும் அரியலூரில் 20 வழக்குகள் பதியப்பட்டு 29
பேரும் கரூரில் 15 வழக்குகள் பதியப்பட்டு 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டுமே 466 லிட்டா் கள்ளச்சாராயமும் 1335 லிட்டா் ஊறல் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதே போல அரசு மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவா்கள் மீதும் காவல்துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 207 வழக்குகளும், புதுக்கோட்டையில் 174 வழக்குகளும், பெரம்பலூரில் 138 வழக்குகளும், அரியலூரில் 82 வழக்குகளும், கரூரில் 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தடுப்புப் பணியில் மாவட்டந்தோறும் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு பகலாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் காவல்துறையினா் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் வே.பாலகிருஷ்ணன்.

தலைப்புச்செய்திகள்